Saturday, 3 December 2022

கற்றதோடு நின்றால் பெருங்குழி, கற்றவாறு நின்றால் திருவடி.

    தாண்டியதும் வேண்டியதும்


முன்னுரை:

          கற்றதோடு நின்றால் பெருங்குழி, கற்றவாறு நின்றால் திருவடி என்று அறிந்து உணர்ந்து நல்ல தெளிவு அடைந்த உயிர்களுக்கு இரங்கி உடன் அருள் அளிக்கும் பெருமான், அடியேனுக்கு இரங்கி நல்ல அறிவு அளிப்பதற்கு முன்பு அடியேன் கொண்டு இருந்த அறியாமைகளையும், அவனருளை முன்னிறுத்தி என்னறிவைக் கொண்டு உணர்ந்து அடைந்த நல்ல தெளிவுகளையும் மிக விரிவாகக் காணலாம் வாருங்கள்.

சிவசிவ:

          அன்று நான் விரும்பியதை எல்லாம் கேட்டேன். ஆயினும், எனக்கு இரங்கி நீ வேண்டியதை மட்டும் அளித்தாய்; இன்று நான் வேண்டியதை மட்டும் கேட்பேன். ஆயினும், எனக்கு இரங்கி நீ விரும்பியதை எல்லாம் அளிப்பாய்.

பாடல்:

அப்பனே என்றிறைஞ்ச 
அம்மையாய் வந்தருளும்
அப்பனே உன்னருளை 
அற்பனும் பெற்றதுண்டு
அப்பனே என்றருள்வாய் 
அம்மையாய் வந்தருளி
அப்பனே உன்னடியில் 
அற்பனும் வந்துய்வதற்கே.

நான் செய்த முன் வினையைக் காட்டி எனக்கு இது போதும் என்றாய்:

          தன்னைப் பின் தொடரும் துன்பங்கள் ஒன்றையும் அறிந்து கொள்ளாது, ஒருநாள் பிள்ளை அவன் தந்தையிடம் சென்று எனக்கு அது வேண்டும் என்றான். பிள்ளை அவன் முன்செய்த வினையை எண்ணி மறுநாள் பிள்ளையிடம் தந்தை வந்து உனக்கு இது போதும் என்றார்.

          அவ்வாறே, நான் செய்த முன் வினையால் என்னைப் பின் தொடரும் துன்பங்கள் ஆயிரம் இருந்தாலும் அதில் ஒன்றையும் அறிந்து கொள்ளாது பிள்ளை நான் உன்னிடம் வந்து எனக்கு அது வேண்டும் என்றேன். பிள்ளை நான் முன் செய்த வினையால் என்னைப் பின் தொடரும் துன்பங்கள் ஒவ்வொன்றையும் காட்டி, தந்தை நீ என்னிடம் வந்து உனக்கு இது போதும் என்றாய்.

          பிள்ளையின்பால் கொண்ட அன்பினால் அந்தப் பிள்ளை வேண்டியதை எல்லாம் அளிக்காது, அந்தப் பிள்ளைக்கு வேண்டியதை மட்டுமே அளித்தார் அந்தத் தந்தை. ஏன் என்றால் அந்தப் பிள்ளையின் தந்தை ஓர் உயிர். ஓர் உயிரால் அவ்வளவு தான் இயலும். ஆனால், இந்தப் பிள்ளையின் தந்தை நீயோ பேர் இறை ஆயிற்றே. ஓர் உயிரால் இயலாதது அனைத்தும் பேர் இறை உன்னால் இயலும் தானே?

         ஆம், ஓர் உயிரின் விதியை மாற்றி அந்த உயிர் விரும்பியதை எல்லாம் அளித்துதவ வேறு ஓர் உயிரால் இயலுமா என்றால் இயலாது. ஆனால், உயிர்கள் அனைத்தும் எந்த ஒன்றை விரும்பினாலும் அந்த ஒன்றை அளித்துதவத் தடையாக இருக்கும் விதியை மாற்றியருள உன்னால் இயலுமா என்றால் இயலும். ஆயினும், எனக்கு இரங்கி ஏன் அந்த விதியை நீ மாற்றி அருளவில்லை? 

கற்றால் பாதி நின்றால் மீதி:

          என்னைக் குறித்து அனைத்தையும் நன்கு அறிந்து கொண்டிருக்கும் உன்னைக் குறித்து ஒன்றையும் அறிந்து கொள்ளாததே காரணம் என்று நீ உணர்த்த நான் உணர்ந்து கொண்டேன் பெருமானே.

          ஆம், அறம், பொருள், இன்பம், வீடு எனும் செந்தமிழ் மறைநான்கின் உட்பொருளாக விளங்கும் செம்பொருள் உன்னைக் குறித்து நன்குணர்ந்து பாடிய நால்வர் பெருமக்கள் சென்றுய்ந்த வழிகளை அறிந்து கொண்டால் மட்டும் போதுமா என்ன? அந்த அறம், பொருள், இன்பம், வீடு எனும் செந்தமிழ் மறைநான்கின் உட்பொருளாக விளங்கும் செம்பொருள் உன்னைக் குறித்து நன்குணர்ந்து அந்த வழிகளில் சென்றால் தானே இலக்கை அடைய இயலும். இதை நீ உணர்த்த நான் உணரும் முன்புவரை என்னுடைய செயல்கள் அனைத்தும் படிப்பது உன் திருவாசகமாகவே இருந்தாலும் இடிப்பது உன் திருக்கோவில் போன்றதாகவே இருந்தது.

          முதலில் இயற்கை எனத் தொடங்கி, பிறகு பல தெய்வங்கள் என்று வளர்ந்து, முடிவில் இறைவன் ஒருவன் என்று உணர்ந்து கொண்ட முன்னோர்களின் வழி நின்ற நால்வர் பெருமக்கள், உயிர்கள் அனைத்தும் வணங்கத்தக்கப் பொருள் என்று எட்டு உயர்ந்த குணங்களை உடைய ஒன்றாக விளங்கும் உன்னைத் தானே தங்கள் திருப்பதிகங்களில் பாடிப் பரவி உள்ளனர். ஆயினும், அத்திருப்பதிகங்களில் உன்னை வணங்கி அருள் பெற்றவரின் பெயர்களும் உண்டு என்று கூறி நான் செய்த பாவங்கள் ஏராளம்.

          செந்தமிழ் மொழியையும், செந்தமிழ் நெறியையும் நம்முயிராய் கொள்ளாது உன்னருளை முழுவதுமாகப் பெற்றுய்ய இயலாது என்பதை நன்கு விளங்கிக் கொண்ட நல்லடியார் பெருமக்கள் அதிலிருந்து எடுத்துரைத்த அறங்களில் முதன்மையானது இறைவனுக்கு உரிய அனைத்து உயர் இலக்கணங்களையும் உடைய ஓர் இறைவன் உனக்கு முன்பு உயிர்கள் அனைத்தும் ஒன்றே என்பதும் மனிதரில் குணத்தால் அன்றி பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் போன்ற வேறுபாடுகள் இல்லை என்பதும் ஆகும்.

          ஆனால், நானோ கொன்று உண்ணாத நாளும் இல்லை, சென்று கொல்லாத ஆளும் இல்லை என்பது போல் நான் கற்றது ஒன்றாகவும் செய்தது ஒன்றாகவும் இருந்தது. அதனால் தான் உன்னிடம் வந்து கற்றவாறு நிற்காது என்று அருள்வாய் என்றேன், என்னிடம் வந்து கற்றவாறு நிற்கும் அன்று அருள்வேன் என்றாய். 

          ஆம், தவம் இருக்க வரம் அளிக்கும் உன்னை மறந்து, தவம் இருந்து வரம் பெற்றவரைத் தேடி அழைந்த நான் கற்றதோடு நின்றால் பாதிக் கிணறை மட்டுமே தாண்ட இயலும் என்றும், கற்றவாறு நின்றால் மட்டுமே மீதிக் கிணறையும் தாண்ட இயலும் என்றும் நன்கு உணர்ந்து கொண்டேன் பெருமானே.

நான் செய்த முன் வினையை நீக்கி எனக்கு எது வேண்டும் என்பாய்:

         அம்மை என்று அவளை அழைக்க முதலாகும் நம் வாழ்வானது அப்பன் என்று உன்னை அழைக்க முடிவாகும் என்பதை உணர்ந்து எடுத்துரைத்த அருளாளர் பெருமக்கள் ஒருவரோ இருவரோ அல்லர், இருந்தும் அதை எல்லாம் விளங்கிக் கொள்ளாது சென்றதின் விளைவே உன்னருளை முழுவதுமாகப் பெற்றுய்ய இயலாததற்குக் காரணம் ஆகும்.

           “கற்றதோடு நின்றால் பெருங்குழி, கற்றவாறு நின்றால் திருவடி” என்று அறிந்து உணர்ந்து நல்ல தெளிவு அடைந்த உயிர்களுக்கு இரங்கி உடன் அருள் அளிக்கும் நீ, பெரும் மயக்கத்தில் உழன்ற எனக்கு இரங்கி முதலில் நல்ல அறிவு அளித்தாய்.

          உன்னருளை முன்னிறுத்தி என்னறிவைக் கொண்டுணர்ந்த இன்று நல்ல தாய் உள்ளம் கொண்ட என் அன்பு தந்தை நீ ஒருவனே இறைவன் என்று நன்கு உணர்ந்து கொண்ட நான் அறிந்து கொண்டேன் இனி எதை விரும்பிக் கேட்டாலும் எனக்கு அதை இரங்கி அருள்வாயென்று.

          மிக நல்ல தாயின் உள்ளமும் மிக நல்ல தந்தையின் உருவமும் கொண்ட நீ பெண்ணுருவில் ஒரு பாதியைக் கொண்டு அருள வந்தாலும், நல்ல பெண்ணுருவை உன்னுருவாய் கொண்டு அருள வந்தாலும் உன்னை என் அன்பு தந்தை என்று அழைத்த நானும் உன் அருளைப் பெற்றேன்.

          உண்மையில், இப்பொழுது தான் நன்கு உணர்ந்து கொண்டேன், நால்வர் பெருமக்கள் மட்டுமன்று நல்லடியார்கள் அனைவரும் உன் உள்ளத்தை நல்ல தாயிற்கு ஒப்பாகவும் உன் உருவத்தை நல்ல தந்தைக்கு ஒப்பாகவும் கொண்டது எதற்காகவென்று? 

          ஆம், ஓர் இறைவனாக விளங்கும் உன்னை உருவில் இரண்டாகக் கொள்வது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்த்தே உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் என்று திருக்கடைக்காப்பிலும் மாதினையோர் கூறுகந்தாய் என்று தேவாரத்திலும் பாதியோர் பெண்ணை வைத்தாய் என்று திருப்பாட்டிலும் அம்மையே அப்பா என்று திருவாசகத்திலும் பாடி என் அன்பு தந்தை உன்னுருவில் நல்ல தாய் உணர்வைப் பெற்றுள்ளனர்.

          எங்களின் தாயும் தந்தையுமாக விளங்கும் உன்னை அன்று தாய் என்றும் தந்தை என்றும் இருவேறு பொருளாக்கியது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்து அறியாத நான் இன்று உடனுறை என்பது நறுமணத்துடன் கூடிய குறுமலருக்கு ஒப்பாகும் என்றும் உடனமர் என்பது இன்னுயிரை விட்டு அகன்ற நல்லுடக்கு ஒப்பாகும் என்றும் உன்னருளால் நன்கு உணர்ந்து கொண்டேன் பெருமானே.

          என்றோ நல்லுடலை விட்டகன்ற இன்னுயிர் இன்றும் அந்த நல்லுடலிற்கு மிக அருகில் தான் உள்ளது என்றாலும் அதற்கு என்றும் பிணம் என்று தான் பெயர் என்பதை  நன்கு உணர்ந்து கொண்ட நான் கொள்ளும் தவத்தில் இன்று மிகச் சிறந்தவன் இல்லை என்றாலும் உன்னைக் கொண்டுள்ள விதத்தில் சிறந்து விளங்கும் எனக்கு இரங்கி நீ அருள் செய்து கொண்டுள்ளாய்.

          ஆம், பசியில் கன்று தன் தாயை அழைத்தால் தாய் உடன் ஓடிச் சென்று தன் உணவை அளிப்பாள். அவ்வாறே, பிள்ளை நான் உன்னை அழைத்தேன் தந்தை நீ ஓடி வந்து என்னை அணைத்தாய். 

          இன்று இவ்வாறு எல்லாம் அருள் செய்து கொண்டு இருக்கும் உன்னிடம் அன்று அவ்வாறு எல்லாம் கேட்டது தவறா என்றால் தவறு ஒன்றும் இல்லை என்பேன். ஏன் என்றால் என் தலைவிதியைக் காட்டி எனக்கு இது போதும் என்ற நீ என் தலைவிதியையே மாற்றி எனக்கு எது வேண்டும் என்றது அதனால் தான்.

           இன்று எனக்கு எது வேண்டும் என்றாலும் அதைத் தந்தருள் செய்யும் உன்னருளால் அப்பன் என்ற சொல்லுக்கு அம்மை என்று பொருள் உணர்ந்து கொண்ட நான் இதுவரை தாண்டியதோ பெருங்குழி, இனி எனக்கு வேண்டியதோ உன் திருவடி.

சிறு குறிப்பு:

           என்று அருள்வாய் என்றதனால் எனக்கு இரங்கி இன்று அருளிட வேண்டாம் பெருமானே, என்னவளுடன் நான் வாழ்ந்து முடிக்கும் அன்று அருளினால் போதும்.

அரன் ஆடலில் ஒன்று
திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment

கற்றதோடு நின்றால் பெருங்குழி, கற்றவாறு நின்றால் திருவடி.

     தாண்டியதும் வேண்டியதும் முன்னுரை:           கற்றதோடு நின்றால் பெருங்குழி, கற்றவாறு நின்றால் திருவடி என்று அறிந்து உணர்ந்து நல்ல தெளிவு ...